பர்சனல் லோன் வாங்க வழிகள்
பர்சனல் லோன் என்று சொல்லப்படும் தனிநபர் கடனை குறைந்த வட்டியில் பெற முடியுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்!
பர்சனல் லோன் எடுக்க தேவைகள்
தற்போதுள்ள சூழலில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு கடனைப் பெற்றுத்தான் வாழ்வை நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனை வாங்கியுள்ளதாக பலரும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். இந்த வகை கடன்கள் மற்றவற்றை விட சற்று கூடுதல் வட்டியுடனேயே வழங்கப்படுகிறது. இருப்பினும் அவசரத் தேவைக்காக அதிக வட்டியில் தனிநபர் கடன் வாங்கும் பலரும் பின்னர் மாதத்தவனையை செலுத்தும் போது திணறவே செய்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவாக இருக்க
தனிநபர் கடனைப் பெற நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது என பார்க்க வேண்டும். தனிநபர் கடன் வட்டி என்பது கேஸ் டு கேஸ், அதாவது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். குறிப்பாக கடனை வழங்கும் வங்கி வாடிக்கையாளரிடம் முதலில் கேட்பது சிபில் ஸ்கோரைத்தான். சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் தனி நபர் கடன் கிடைக்கும் என வங்கி அதிகாரிகள் கூறுவார்கள். விரைவாக கடன் கிடைக்கவும், நீண்ட கால தவனை பெறவும், சிபில் மதிப்பெண் கூடுதலாக இருப்பது உதவும்.
சிபில் மதிப்பெண் முக்கியத்துவம்
ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று அதை தவறாமல் செலுத்தி வருபவர்களுக்கு சிபில் மதிப்பெண் கூடுதலாகவே இருக்கும். கடனுக்கான மாதத்தவனையை சரிவர செலுத்தாமல் அல்லது தாமதமாக செலுத்தினால் சிவில் மதிப்பெண் குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு 300 முதல் 900 வரை சிவில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
சிபில் மதிப்பெண் மற்றும் வட்டி விகிதம்
ஒரு வாடிக்கையாளருக்கு சிவில் மதிப்பெண் 750-க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவருக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. சிபில் மதிப்பெண் 700 க்கும் கீழ் இருந்தால், அதாவது 650 முதல் 700 வரையில் இருந்தால் வட்டி விகிதம் சற்றே அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பற்ற கடன்
தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன் வகையில் உள்ளது என்பதால் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் மிக நுணுக்கமாக கவனிக்கின்றன. வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு தனிநபர் கடனை விட வட்டி சற்று குறைவாகவே இருக்கும். எனவே சற்று அலசி ஆராய்ந்து அவசியத் தேவை என்றால் மட்டும் தனிநபர் கடன் வாங்குவது கூடுதல் நிதிச்சுமையில் சிக்காமல் இருக்க ஏதுவாக இருக்கும்.